சர்வதேச அளவில் 4-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு
அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு வறுமை’ என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன
நியூயார்க்: அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு வறுமை’ என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன. இந்நிலையில், குழந்தை உணவு வறுமையால் தெற்காசிய நாடுகள் மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்க பிராந்தியங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 18 கோடியே 10 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து போதாமையால் அவர்களது உயரம், உடல் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 18. 1 கோடிபாதிக்கப்பட்ட குழந்தைகளில் 65 சதவீதத்தினர் இந்தியா, கினியா, ஆப்கானிஸ்தான், புர்க்கினா பாசோ, எத்தியோப்பியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் மட்டும் 6கோடியே 40 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க உணவு இன்றி வாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் சோமாலியா நாடு முதலிடத்தில் உள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார சிக்கல்களில் இருந்து ஓரளவு மீண்டாலும் உணவு பண்டங்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களின் விலைவாசியும் அதிகரித்திருப்பதே அவலநிலைக்கான காரணம் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
What's Your Reaction?