முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நிதி நிலுவை குறித்து பிரதமரிடம் பேசுகிறார்
டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார்.
சென்னை: டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார்.
தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் இந்த நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடியாகும், மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியாகும். மீதமுள்ள நிதியான ரூ.33,593-ஐ வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?