திரை விமர்சனம்: கடைசி உலகப் போர்
ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் 2028-ல் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது
ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் 2028-ல் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜி.என்.ஆர் (நாசர்), ஊழல்வாதியான அவரது மைத்துனர் நடராஜ் (நட்டி நடராஜ்) ஆட்டி வைப்பதற்கேற்ப ஆட்சி நடத்துகிறார். ஜி.என்.ஆரின் திடீர் உடல்நலக் குறைவால், அவரதுஇடத்தில் மகள் கீர்த்தனாவை (அனகா) தனக்கேற்ற பொம்மையாகப் பொருத்தி வைக்க, அவரைக் கல்வி அமைச்சர் ஆக்குகிறார் நடராஜ்.ஆனால், தமிழரசனின் (ஹிப் ஹாப் ஆதி) வழிகாட்டுதலால், சுயமாகச் செயல்படத் தொடங்குகிறார் கீர்த்தனா. அவரை பின்னாலிருந்து இயக்கும்தமிழரசனைத் தீவிரவாதி எனப் புனைந்து என்கவுன்ட்டர் செய்ய ஏற்பாடு செய்கிறார் நடராஜ்.அந்த நேரத்தில் மூன்றாம் உலகப் போர் உருவாகிறது. ரிபப்ளிக் படைகளின் தாக்குதலுக்கு சென்னை இலக்காக, இதில் தமிழ்நாடு, இந்தியாவின் நிலை என்னவானது? நடராஜன், தமிழரசன் என்னவானார்கள்? உலகப் போர் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பது கதை.
‘எதிர்கால ஃபேன்டஸி’ என்கிற கதைக் களத்துக்குள் துணிந்து சாதித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. அண்ணாசாலையின் எல்.ஐ.சி., சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் போன்ற சென்னையின் முக்கிய அடையாளக் கட்டிடங்கள் மீது போர் விமானங்கள், குண்டு வீசித் தாக்கும் தொடக்கக் காட்சியே இது புதிய தலைமுறைப் போர் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. “இப்ப சொல்லப் போறது என்னோடக் கதைதான். ஆனால் அதுல ஹீரோ நான் இல்ல!” என, ‘கிங்மேக்கர்’ நடராஜ் உயிர் பிழைக்க ஓடியபடி கதைசொல்லத் தொடங்கும்போது திரைக்கதையில் பற்றும் தீ, கிளைமாக்ஸ் வரை எரிந்துகொண்டேயிருக்கிறது.
What's Your Reaction?