சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக அதிகரிக்க சீனா முடிவு!
சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி, 2025-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளில் ஆண்களுக்கான சட்டபூர்வ ஓய்வூதிய வயது 60-ல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும்.
பெய்ஜிங்: சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்சுவாவில் வெளியான தகவல்: நாட்டில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்துவது குறித்த முடிவுக்கு 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 11வது அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2025-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளில் ஆண்களுக்கான சட்டபூர்வ ஓய்வூதிய வயது 60-ல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். பெண் பணியாளர்களின் ஓய்வு வயது 55-ல் இருந்து 58 ஆகவும், பெண் தொழிலாளர்களின் ஓய்வு வயது 50-ல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும்.
மாதாந்திர ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஓய்வூதியப் பங்களிப்புக்கான குறைந்தபட்ச ஆண்டு 15-ல் இருந்து 20 ஆக உயர்த்தப்படும். இந்த நடைமுறை 2030 முதல் தொடங்கும். ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் வீதம், 10 ஆண்டுகளில் இந்த நடைமுறை முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஓய்வூதிய பங்களிப்புகளின் குறைந்தபட்ச ஆண்டை அடைந்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில், முந்தைய சட்டப்பூர்வ ஓய்வு வயதை விட முன்னதாக ஓய்வு பெற அனுமதி இல்லை.
What's Your Reaction?