புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
சென்னை: “தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 38 இடங்களில் கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
What's Your Reaction?